புதுச்சேரி யில் முதியோருக்கான ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் இருவரும் பொதுமக்கள் முன்பு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, சுயேட்சையாக எதிர்த்து போட்டியிட்டு, வெற்றிபெற்ற கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது பாஜக வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இவருக்கும் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் நிலவி வருகிறது.
கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை மக்கள் பணி செய்ய விடாமல், மல்லாடி
கிருஷ்ணராம் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை முதல்வர் ரங்கசாமி மூலம் கொடுத்து வருவதாக பலமுறை குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து அரசுக்கு எதிராக, சட்டப்பேரவை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த சில காலமாக ஈடுபட்டுள்ளார், அசோக்.
ஏனாம் பிராந்தியத்தில் இன்று நடைபெற்ற முதியோர் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், மண்டல நிர்வாக அதிகாரி முனிசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவும் கலந்துகொண்டிருந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் இருவரும் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்க தொடங்கினர். அப்போது, விதிகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏன் வந்தீர்கள் என்று மல்லாடி கிருஷ்ணாராவிடம் எம்எல்ஏ அசோக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த மண்டல நிர்வாக அதிகாரி முனிசாமி இருவரையும் விலகிவிட்டார்.
முதியோர் ஓய்வூதியம் பெற வந்த பொதுமக்கள் முன்பு இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதனால் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் அசோக் கூறுகையில், நெறிமுறைகளை மீறி
கூட்டத்திற்கு வந்த மல்லாடி கிருஷ்ணாராவுக்கு அதிகாரிகள் மதிப்பளித்ததாகவும், பயனாளிகள் ஓய்வூதிய ஆவணம் வழங்கும்போது தன்னை தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும் விதிமுறைகளுக்கு மாறாக சட்டமன்ற உறுப்பினருடன் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மற்றவர்களை வரவழைத்து இடையூறு உண்டாக்கி மோதலை ஏற்படுத்த, அதிகாரிகள் முயன்றதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புரிமைக் குழுவில் புகார் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
-ம. ஸ்ரீ மரகதம்







