லாரி மோதியதில் பெண் பலி; தம்பி கண் எதிரே அக்கா பலியான சோகம்

மதுரவாயல் அருகே லாரி மோதியதில் போரூரை சேர்ந்தவர் சோபனா என்ற பெண்  தம்பி கண் எதிரே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  போரூரை சேர்ந்தவர் சோபனா (22) கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர்…

மதுரவாயல் அருகே லாரி மோதியதில் போரூரை சேர்ந்தவர் சோபனா என்ற பெண்  தம்பி கண் எதிரே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

போரூரை சேர்ந்தவர் சோபனா (22) கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் நிறுவனத்தில்
சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி திருவேற்காட்டில்
உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும்
அவருக்கு அதே பள்ளியில் நீட் சம்பந்தமான பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்பட்டு
வருவதால் இன்று பள்ளிக்கு நேரமானதால் தனது தம்பியை ஷோபனா மொபெட்டில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை  அருகே சென்று கொண்டிருந்தபோது குண்டும், குழியுமான சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியதில் ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.  இந்த விபத்தில் அவரது தம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன சோபனா உடலை மீட்டு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

பள்ளிக்கு தாமதமானதால் தம்பியை அழைத்துச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி
அக்கா இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த
பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதாகவும் இந்த சாலையால் அடிக்கடி
விபத்து நடப்பதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இறந்து போன சோபனா குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வந்ததும் இவரது தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், வீட்டிற்கு தந்தையாக இருந்து அனைத்து பணிகளையும் சோபனா செய்து வந்துள்ளார்.

தினமும் தனது தம்பியை பள்ளியில் விட்டு விட்டு பைபாஸில் நேராக வேலைக்கு சென்று விடுவார் இந்த பகுதியின் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பகுதியில் தான் கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு தாயும் மகளும் மோட்டார் சைக்கிள் இருந்து கால்வாயில் விழுந்து இறந்த போன சம்பவம் அரங்கேறியது.  தொடர்ந்து இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாததால் பல விலை மதிப்பற்ற உயிர்கள் இறந்து போவதாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் சேதம் அடைந்து கிடக்கும் இந்த சர்வீஸ் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு அவசரகதியில் சாலையை சீரமைக்கும் நெடுஞ்சாலை துறையினர் அதன்பிறகு அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதே இது போன்ற தொடர் உயிரிழப்புகளுக்கு காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்து சோபனாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது அவரது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பதால் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.