நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்து உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லரில் குடும்ப உறவுகள், அடிதடி சண்டை, காதல், பஞ்ச் வசனங்கள் என அனைத்தும் கலந்து இருந்தது. தொழில் அதிபர் சரத்குமாரின் மூன்றாவது மகன் விஜய். போட்டி தொழில் அதிபராக வரும் பிரகாஷ்ராஜ் மூலம் அவர்களுக்கு தொல்லை வருவதும், அதை விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதும் கதையாக இருக்கும் என்று ட்ரெய்லரில் உணர முடிகிறது.
விஜய்யின் சண்டை காட்சிகள் அனல் பறக்கும் வகையில் உள்ளன. எல்லா “இடமும் நம்ம இடம்தான்”, “அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசித்து கொடுக்கனும். ஏன்னு சொல்லு நீ எதை கொடுத்தாலும் நான் டிரிப்பிளா திருப்பி கொடுப்பேன்,” போன்ற விஜய் பேசும் பஞ்ச் வசனங்கள் ட்ரெய்லரில் உள்ளன. ராஷ்மிகாவுடன் விஜய்யின் நடனம், யோகிபாபுவுடன் நகைச்சுவை காட்சிகளும் ட்ரெய்லரில் இடம்பெற்று உள்ளன. ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில், ஜனவரி 11ம் தேதி நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நடிகர் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11ம் தேதியன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








