2025 பிப்ரவரி மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதத்தில் 9.1 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 1.84 லட்சம் கோடியை ஜிஎஸ்டி வரி வசூல் எட்டியுள்ளது. மொத்த ஜிஎஸ்டி வசூலில் உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் 10.2 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
இது மொத்தம் ரூ. 1.42 லட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதியிலிருந்து கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் 5.4 சதவீதம் அதிகரித்து ரூ. 41ஆயிரத்து 702 கோடியாக இருந்துள்ளது. பிப்ரவரி மாதத்துக்கான மொத்த ஜிஎஸ்டி வசூலில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.35 ஆயிரத்து 204 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ. 43ஆயிரத்து 704 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ. 90ஆயிரத்து 870 கோடியாகவும், இழப்பீட்டு வரி ரூ.13 ஆயிரத்து 868 கோடியாகவும் இருந்துள்ளது.
2025 பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்ட மொத்த ரீஃபண்டுகள் ரூ. 20ஆயிரத்து 889 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 17.3 சதவீதம் அதிகம் ஆகும். ஜிஎஸ்டி வசூலில் இந்த அதிகரிப்பு இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம், வணிக நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், டிஜிட்டல் பணம் செலுத்துதலின் வளர்ச்சி மற்றும் மத்திய அரசின் கடுமையான இணக்க நடவடிக்கைகள் ஆகியவற்றின் விளைவாகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த உயர்வு அரசின் வருவாயை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








