இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

லண்டனில் வருகிற மார்ச் 8ஆம் தேதி சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இவர் கடந்தாண்டு ஒரு முழு சிம்பொனியை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.  தொடர்ந்து அந்த சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி வருகிற மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நடக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,  “இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது…ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா.

தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று(மார்ச்.02) நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாகணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.