மதுரை சோழவந்தான் அருகே மகளை பீர் பாட்டிலால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ( வயது 37). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு நாகு என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இவரின் மூத்த மகள் ராஜேஸ்வரி பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் சமீபகாலமாக ஒருவரை காதலித்து வந்ததாகவும், இது தந்தையான முரளிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் முரளி தனது மகளிடம் படிக்கிற வயதில் காதல் போன்ற தேவையில்லாத விஷயத்தில் கவனத்தை செலுத்த வேண்டாம் என்றும், படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார். இதனை கேட்காத மாணவி தொடர்ந்து தான் விரும்பியவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு மதுபோதையில் வந்த முரளி தனது மகள் காதலித்து வருவதால் ஆத்திரமடைந்து மூத்த மகள் ராஜேஸ்வரியை மது பாட்டிலால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் உள்ளார்.
இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை உறவினர்கள் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
குடிபோதையில் பெற்ற மகளை மது பாட்டிலால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோழவந்தான் காவல் துறையினர் முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement: