ஆகஸ்ட் 20-ஆம் தேதி 5 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சண்முகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனைகள் மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில், தொடர்ந்து அரசு ஊழியர்களை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் கூறி தமிழ்நாடு நிதி அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘ஆத்மா திருமணம்; மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து!’
மேலும், 3% அகவிலைப்படியை உயர்த்தாத தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட 25 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்மானம் இயற்றப்பட்டது. அப்போது, தமிழ்நாடு நிதி அமைச்சரைக் கண்டித்து 8-ஆம் தேதி அனைத்து துறையில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும், 20-ஆம் தேதி தமிழ்நாட்டில் தஞ்சை, கடலூர், திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட 5 மண்டலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.








