சுவாமிமலை அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

கும்பகோணம் அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், கூடுதல் விலை கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன், விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ஒரே…

கும்பகோணம் அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், கூடுதல் விலை கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன், விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ஒரே பணப்பயிர் பருத்தி.
கடந்த ஆண்டு சர்வதேச அளவில் பருத்திக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் இப்பகுதியில் ஒரு குவின்டால் பருத்தி ரூ 11 ஆயிரம்  அளவிற்கு விலை போனது. இதனைத்தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளில் நெல், கரும்பு, வாழைக்கு அடுத்தபடியாக தற்போது பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு வருடம் பல்வேறு நாடுகளில் பருத்தி மகசூல்  அதிகரித்துள்ளதுடன், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பருத்தி சாகுபடி அதிக அளவில் இந்த வருடம் நடைபெற்றுள்ளது. இதனால் பருத்திக்கு இந்த வருடம் தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்பி விவசாயிகள் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு பருத்திக்கு கிடைத்த விலையோடு ஒப்பிடும்போது 50 சதவீத அளவிற்கு குறைவாக இந்த வருடம் விலை போவதால் பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குவின்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 6,642 க்கும், குறைவாக ரூ 5,909 க்கும் ஏலம் போனதையடுத்து கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3700 குவிண்டால் பருத்தி ஏலம் விடப்பட்டது.

இதன் மதிப்பு ரூ 2 கோடியே 35 லட்சம் ஆகும். பருத்திக்கு தற்போது கிடைக்கும் விலை மிகவும் குறைவாக உள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு முன் கும்பகோணம் சுவாமிமலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடச்செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரூபி.காமராஜ்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.