நெல்லையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் – பொதுமக்கள் வேதனை…

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமார், மண்டலச் செய்தியாளர் ஆல்வின் ஆகியோர் நெல்லை பகுதியில்…

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமார், மண்டலச் செய்தியாளர் ஆல்வின் ஆகியோர் நெல்லை பகுதியில் சேதமடைந்த சாலைகள் குறித்து இன்று காலை தொடர் நேரலை வழங்கினர். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலைகள் சேதமடைந்து வருவதை அவர்கள் நேரலையில் படம்பிடித்துக் காட்டினர்.

அப்போது, சேதமடைந்த சாலைகளால் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மாநகராட்சியில் 112 கிலோ மீட்டரை தொலைவிற்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், மோசமான சாலைகள் குறித்து தெரிவித்த திருநெல்வேலி மாநகர மேயர் இந்த நெடுஞ்சாலைகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்தால் உடனடியாக சீரமைக்கப்படும் என கூறினார்.

தற்போது தென்மேற்கு பருவமழை எதிரொலியாக திருநெல்வேலியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகள் இன்னும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதையும் நியூஸ் 7 தமிழ் ஒளிபரப்பியது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், தமிழக அரசும் தலையிட்டு உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று  அப்போது பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதேபோல் திருநெல்வேலி சந்திப்பு, ரயில் நிலையத்திற்கு அருகில், ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 1969-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதியால் இந்த பாலப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய மதிப்பில் ரூ.47 லட்சத்தில் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு 1973-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. திருக்குறளில் இரண்டு அடிகள் இருப்பது போல் இந்த பாலம் அமைந்திருந்ததால் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் என்று கருணாநிதியால் பெயர் சூட்டப்பட்டது.

700 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலம், 26 தூண்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த பாலம் தான் அந்த காலக்கட்டத்தில் ஆசியாவிலேயே முதன் முதலாக ரயில்வே தண்டவாளத்துக்கு மேல் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் என்ற சிறப்பையும், இந்தியாவில் முதன்முறையாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும் பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் தற்போது அந்த பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அது பல விதத்தில் பாழடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

பாலத்தின் மேல்தளத்தில் 24 மணிநேரமும் வாகனப்போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், ஆங்காங்கே உடைப்புகளும், கீறல்களும் தோன்றியுள்ளன. பக்கவாட்டு தடுப்புச் சுவரும், பாலத்தின் கீழ்தளமும் சேதமடைந்துள்ளது. கீழ்த்தளம் முடியும் இடத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருசக்கர வாகன நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர். மேலும் பாலத்தின் சில இடங்களை திறந்தவெளி கழிப்பிடமாகவும், சில இடங்களில் குப்பைகளை கொட்டியும், அதனால் துர்நாற்றம் வீசி பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

நெல்லையில் சாலைகள் சேதமடைந்தது தொடர்பாக நியூஸ் 7 தமிழில் ஒளிபரப்பான காணொலியை முழுமையாக காண….

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.