வேளாண் மசோதாக்களை எரித்து ‘ஹோலி’ கொண்டாடிய விவசாயிகள்!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து, மசோதாவின் நகல்களை எரித்து ஹோலி பண்டிகையை கொண்டாட துவங்கியுள்ளனர். தேசிய தலைநகர் மற்றும்…

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து, மசோதாவின் நகல்களை எரித்து ஹோலி பண்டிகையை கொண்டாட துவங்கியுள்ளனர்.

தேசிய தலைநகர் மற்றும் பஞ்சாபில் மாநில எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் நேற்று புதிய வடிவத்தை எட்டியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வேளாண் மசோதாக்களின் சட்ட நகல்களை விவசாயிகள் தீ வைத்து கொளுத்தி ஹோலி பண்டிகையை கொண்டாட துவங்கியுள்ளனர்.

மேலும், ஏப்ரல் 5ம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை காலை 11 முதல் மாலை 5 மணி வரை முற்றுகையிடுவதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், “மத்திய அரசு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக பொது விநியோக முறையை சீர்குலைத்திட திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு, இந்திய உணவுக் கழகத்திற்கான நிதியை வெகுவாக குறைத்துள்ளதுடன் பயிர்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளையும் மாற்றியமைத்துள்ளது. ஆகவே இந்த போராட்டத்தினை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.” என கூறியுள்ளது.

பஞ்சாபில் விவசாயிகள் பலர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்து தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஹோலி கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் 42 இடங்களில் இந்த போராட்டத்தினை விவசாயிகள் முன்னெடுத்திருந்ததாக பாரதிய கிசான் அமைப்பின் செயலாளர் சுகதேவ் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த மசோதாவை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போதுவரை இருதரப்பினரிடையே எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.