பழனி அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டுயானை விவசாயியை மிதித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சிந்தலவாடம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இராம பட்டினம் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் தண்டபாணி(52). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த போது, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று தண்டபாணியை தாக்கியது. இதில் படுகாயமடைந்த தண்டபாணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், தண்டபாணியை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தண்டபாணியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒற்றைக்காட்டு யானை சில நாட்களாகச் சுற்றி வரும் நிலையில் ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானைகளின் கண்காணிப்பு பணியில் ஈடுபடாமல் இருந்ததால் நள்ளிரவில் யானை மிதித்ததில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







