இந்திய, இலங்கை மக்களின் ஒற்றுமை திருவிழா என அழைக்கப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா மக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
ராமேஸ்வரத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவிலும், இலங்கையின்
நெடுந்தீவில் இருந்து 10.5 நாட்டிக்கல் மைல் தொலைவிலும் 285 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள கச்சத்தீவில் 1913ல் ராமநாதபுரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாட்சி
என்பவர் அந்தோணியார் தேவாலயத்தை கட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவும், தவக்கால யாத்திரையும் இந்தாண்டு மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்களுடன் இணைந்து பல இந்து, பௌத்த மக்களை உள்ளடக்கி இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள்
பங்கேற்றனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள மீன் இறங்கு தளத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 12 நாட்டுப் படகுகளில் பயணிகள் முழு பாதுகாப்புடன் கச்சத்தீவு சென்றனர். தீவிலுள்ள கோவிலை சுற்றிலும் குடில் அமைத்தும், மரத்தடியிலும் மக்கள் தங்கியிருந்து வழிபாடு நடத்தினர். மின் ஒளி அலங்காரத்தில் ஜொலித்த அந்தோணியார் கோவிலில் மார்ச் 3 மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவை, தொடர்ந்து திருச்செபமாலை, திருச்சிலுவை பாதை தியானம், நற்கருணை ஆராதனை, திருச்சொரூப பவனி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
மார்ச் 4 காலை 7 மணிக்கு திருச்செபமாலை, திருவிழா திருப்பலி, திருசொரூப ஆசீரும் நடைபெற்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுற்றது. அப்போது இந்திய – இலங்கை
நல்லுறவுக்காக இரு நாட்டு பாதிரியார்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர், கொரோனா வைரஸ் ஒழிப்பு, உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம், இலங்கை
பொருளாதார மீட்சி உள்ளிட்டவைகளை முன்வைத்தும் பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற இந்து, பௌத்த சமய மக்களுக்கு நன்றியையும்
பகிர்ந்து கொண்டனர். திருவிழாவில் பங்கேற்ற இரு நாட்டு மக்களும், இந்தியா –
இலங்கை உறவு பலப்பட வேண்டும் எனும் நோக்கில் கச்சத்தீவு வந்ததாகவும்,
தொப்புள்கொடி உறவுகளை சந்தித்தது புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும்
அளிப்பதாக தெரிவித்தனர்.