எடப்பாடி செட்டிமாங்குறிச்சி அருகே, மளிகை கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி ரூ.30,000 பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில்
குமார் என்பவர் அம்மன் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென இருசக்கர வாகனத்தில் மளிகை கடைக்கு வந்த ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் கேட்டுள்ளார்.
மளிகை கடைக்காரர் குமார் ஹான்ஸ் பாக்கெட்டை அந்த நபரிடம் கொடுத்தவுடன் தான் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனவும் உடனடியாக ரூ.50 ஆயிரம் கொடுக்காவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதால் பயந்து போன குமார் ரூ.30 ஆயிரம் கொடுத்துவிட்டு பிறகு எடப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் விசாரணை செய்தபோது அது போலியான அதிகாரி என்பதும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 28 வயதான மணிகண்டன் என்பதும் தெரியவந்தது.
பின்னர் மணிகண்டனை கைது செய்த எடப்பாடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் எடப்பாடி, வாழப்பாடி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் மணிகண்டன் மீது ஏற்கனவே 13 திருட்டு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மளிகை கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி 30 ஆயிரம் பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூபி.காமராஜ்







