கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கும்பக்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கும்பக்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத்
தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் வனத்துறையினர் முழு
கட்டுப்பாட்டில் உள்ளது தான் கும்பக்கரை அருவி.  இந்த கும்பக்கரை அருவிக்கு
மேற்கு தொடர்ச்சி மலை, கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி கும்பக்கரை ஆற்றை வந்தடைந்து கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த அருவிக்கு வருடத்தில் பெரும்பாலான நாட்களில் நீர் வரத்து இருப்பதால், தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக  சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று குளிப்பதற்கும்,  செல்பி,  புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார்.

மேலும் வெள்ளவரத்து சீராகும் வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்  பயணிகள்
குளிப்பதற்கு தடைவிதித்து அறிவித்ததோடு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப்
பயணிகள் கும்பக்கரை அருவிப்பகுதிக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதனையடுத்து அருவிப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் அருவிக்கு வருகிற வெள்ளவரத்து குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அருவிப்பகுதியில் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் சென்று விடாமல் இருப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.