எந்த சூழ்நிலையிலும் கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை, மருத்துவத் துறை அதிகாரிகளும், காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர்.
முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்தும், கொரோனா தடுப்பூசி, தேர்வுகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும், எந்த சூழ்நிலையையும் கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் 41.66% பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர், தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்றுப் பரவல் உயர தொடங்கியிருக்கின்றது என்றும், தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி எனவும், எதிர்காலத்தில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அனைத்து அரசுத்துறைகளும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.







