மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆயிரத்து 441 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் மக்களின் கவனத்தை மின்சார வாகங்கள் ஈர்த்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மின்சார ஸ்கூட்டர்கள் தீடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இதேபோல், கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று தீபிடித்து எரிந்தது. இந்த விவகாரம் தீவிரமடையத் தொடங்கியதால் இதற்கான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்திருந்தது. ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூடர் தீப்பற்றி எரிந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டரூடன் விற்பனை செய்யப்பட்ட 1,441 ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக ஓலா அறிவித்துள்ளது. மேலும் மின்சார ஸ்கூட்டர்களில் தீப்பிடித்துக்கொண்டதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள ஓலா நிறுவனம். திரும்ப பெறப்படும் ஸ்கூட்டர்கள், சர்வீஸ் இன்ஜினீயர்களை கொண்டு பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனம் எஸ்-1, எஸ்-1 ப்ரோ என இரு வகையான மின்சார ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தப் போவதாகவும், அதற்காக 500 ரூபாய் முன்பணம் கொடுத்து முன்பதிவு செய்யவேண்டும் எனவும் அறிவித்திருந்தது. மக்கள் மத்தியில் இதற்கான வரவேற்பு அதிகமாக இருந்த நிலையில், ஏராளமானோர் இதற்கான முன்பதிவை செய்தனர்.
பின்னர், வாகனத்தை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம், வாகன சேதம் என ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இது போன்ற சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.







