ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்வதால், பாதுகாப்பான பயணம் என்ற தலைப்பில் நேற்று ஒரு நாள் முழுவதும் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. அதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் இன்று பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து நியூஸ்7 தமிழ் நேற்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் நேரடியாக பதிவு செய்தனர். அப்போது, பெரும்பாலான இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடுதல் பேருந்து வசதியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி, காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம் சாப்பர்த்தி ஊராட்சி, பந்தேரி கிராமத்தில் சாலைகள் குறுகலாக உள்ளதாகவும், அங்கு சாலையை அகலப்படுத்தி பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என எம்எல்ஏ அசோக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் சிவசங்கர், மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த உடன், மினி பேருந்து சங்க உரிமையாளர்களுடன் பேசி மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும், உறுதியளித்தார். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித்தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
இதேபோல், கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு பதிலுரை பேசிய அமைச்சர் சிவசங்கர், புரட்சிகரமாக மினி பேருந்து திட்டத்தை கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக கொண்டு வந்ததாகவும், பேருந்துகளை பார்க்காத கிராமங்களுக்கு பேருந்து சேவை வழங்கப்பட்டதாகவும் கூறினார். கூட்டத்தொடருக்கு பிறகு மின் பேருந்து உரிமையாளர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.







