தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்திருந்தது. இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்காக நிகழ் நிதியாண்டில் (2026-2027) ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்படவுள்ளது. பிற நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தையொட்டி, சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.




