உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய அந்நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்தபடி பலனளிக்கவில்லை என மைக்ரோசாஃப்ட் 365 நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மைக்ரோசாஃப்ட் 365 Status தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சேவைகளின் செயல்பாட்டை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைக் கண்காணித்ததில், அவை எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், தொடர்ந்து நிலவும் போக்குவரத்து மேலாண்மைச் சிக்கல்களைக் கையாளவும், சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் மாற்று வழிமுறைகளைத் தீவிரமாகக் கண்டறிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல், Teams, Copilot சேவைகள் பாதிப்பு!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook, அலுவலகப் பணிகளுக்கான Teams, செயற்கை நுண்ணறிவு உதவியாளரான Copilot உள்ளிட்ட மைக்ரோசாஃப்ட் 365 சேவைகள் இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயனர்கள் Outlook கணக்குகளை அணுகுவதிலும், மின்னஞ்சல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும், இன்பாக்ஸ் பக்கத்தைத் திறப்பதிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல், Teams மற்றும் Copilot சேவைகளையும் பயன்படுத்த முடியாமல் பலர் தவித்தனர். இணையதளச் சேவைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் Downdetector தளத்தின்படி, இந்தப் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது உலகம் முழுவதும் சுமார் 1.30 லட்சம் பயனர்கள் சேவை முடக்கம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளனர்.
சர்வர் கோளாறே முக்கியக் காரணம்!
இந்தத் தொழில்நுட்பப் பாதிப்பு குறித்து முதலில் விளக்கமளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், பல்வேறு வழிகளில் Exchange Online மின்னஞ்சல் சேவையை அணுகுவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தது. தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் ஒரு பகுதியில் அதிகப்படியான சுமை ஏற்பட்டிருப்பதே இணைப்புச் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. சில சர்வர்கள் தானியங்கி செயல்திறன் சோதனைகளில் தோல்வியடைந்து எதிர்பாராத விதமாகச் செயலிழந்ததால், அவற்றின் பயன்பாட்டில் இருந்த போக்குவரத்து மற்ற சர்வர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் செயல்பாட்டில் இருந்த சர்வர்கள் கூடுதல் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாகப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல என்றும், சர்வர்களின் செயல்பாடு குறைந்ததே கூடுதல் சுமைக்குக் காரணம் என்றும் மைக்ரோசாஃப்ட் விளக்கம் அளித்துள்ளது.
மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மைக்ரோசாஃப்ட்!
இந்திய நேரப்படி நவம்பர் 13ஆம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், சேவைப் பாதிப்பைக் குறைக்கவும், தற்போதைய தடைகளைச் சரிசெய்யவும், உள்கட்டமைப்பின் சில பகுதிகளை மீண்டும் சீரான செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பாதிப்பு தொடர்பான விரிவான தகவல்களை Microsoft 365 நிர்வாக மையத்தில் MO1550821 என்ற அறிவிப்பு எண்ணின் கீழ் தெரிந்துகொள்ளலாம் என்றும், நிர்வாக மையத்தை அணுக முடியாதவர்கள் https://msft.it/6013xBHsf என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அரசு அலுவலகங்களிலும் பாதிப்பு!
இந்த உலகளாவிய சேவை முடக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவின் சில மத்திய அரசு துறைகளின் மின்னஞ்சல் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT), அவசரத் தடைகள் தொடர்பான விசாரணைகளுக்கு மின்னஞ்சலுக்குப் பதிலாகத் தொலைபேசி வாயிலாக ஆஸ்திரேலிய தடைகள் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், வேளாண்மை, மீன்வளம் மற்றும் வனத்துறை (DAFF), நவம்பர் 13ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மைக்ரோசாஃப்ட் D365 சேவை முடக்கம் காரணமாகத் தங்களது மின்னஞ்சல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துறைக்கு மின்னஞ்சல் அனுப்புவதிலும், அங்கிருந்து மின்னஞ்சல்களைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
இண்டிகோ நிறுவனமும் அறிவிப்பு!
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கத்தின் தாக்கம் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோவையும் பாதித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் சேவை அறிவிப்பை வெளியிட்டுள்ள இண்டிகோ, உலகளாவிய மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம் காரணமாகத் தங்களது மின்னஞ்சல் வழியிலான வாடிக்கையாளர் ஆதரவு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களைப் பெற முடியாத நிலை ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், மற்ற அனைத்து வாடிக்கையாளர் ஆதரவு வழிகளும் தொடர்ந்து செயல்படும் என்றும், அவசர உதவிகளுக்கு இணையதளம் அல்லது மொபைல் செயலி வாயிலாக 6E Skai சேவையைத் தொடர்புகொள்ளலாம் என்றும் இண்டிகோ அறிவுறுத்தியுள்ளது. உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் சேவைகள் எப்போது முழுமையாகச் சீரடையும் என்ற எதிர்பார்ப்பு பயனர்களிடையே எழுந்துள்ளது




