தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் அமர்வு இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூடியது. இதனிடையே சபாநாயகர் தேர்தலில், ஆளும் கட்சியான தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். துணை சபாநாயகர் பதவிக்கு துறையூர் தவெக எம்.எல்.ஏ. ரவிக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் ஜேசிடி பிரபாகரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார். இந்த நிலையில் சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துரை தெரிவித்தார்.
இறுதியாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுகையில், “மக்களின் எதிர்பார்ப்புகளை பேரவைக்கு கொண்டு வந்து அதனை செயல்படுத்துவதற்காக திட்டங்களை சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் அதிக நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்ற வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம்.
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் இடம்பெற்றிருப்பவர்களின் கருத்துகளுக்கும், தவெக உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் சமமாக மதிப்பளிக்கப்பட்டு, நன்மைகள் ஏற்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இந்தப் பேரவை செயல்படும். அதற்குறிய வகையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவையை வழிநடத்தும் பன்பை பெற்ற தலைவரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்ற வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப, சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராக, செம்மையாக அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டப்பேரவை ஜனநாயக பண்புகள், ஜனநாயக நெறிகள் பேணிப் பாதுகாப்பதில் பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்தார்.







