சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டு தான் இருக்கும்- பிரதமர் நரேந்திர மோடி

எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டே தான் இருக்கும் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்திற்கு பதில் அளித்து…

எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டே தான் இருக்கும் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்திற்கு பதில் அளித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று பேசினார். அவர் பேச தொடங்கிய போது அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி கடும் அமளியியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அவ்வாறு நடந்து கொள்ளும் அவை உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டே தான் இருக்கும்.

கடந்த 4 ஆண்டுகளுக்குள் 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் 48 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, கார்கேயின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் மட்டும் 1.70 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிலும் கல்புர்க்கியில் 8 லட்சம் ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு வங்கி கணக்கு மூடப்படும் போது ஏற்படும் வலியை என்னால் புரிந்துக்கொள்ள முடியும்.

மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை

சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை கொடுக்கிறது. அதனால் தான் 25 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதே நேரம் நாங்கள் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற கடினமாக உழைக்கிறோம். நாங்கள் தொழில்நுட்ப சக்தியுடன் உழைக்கும் கலாச்சாரத்தை மாற்றியுள்ளோம். உழைக்கும் வேகத்தையும், அளவை அதிகரிப்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள், அனைத்து தரப்பை சேர்ந்த பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே உண்மையான மதச்சார்பின்மை.

நாட்டில் 110 மாவட்டங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். தொடர் கவனம் மற்றும் செயல்திறன் மதிப்பாய்வு காரணமாக இந்த மாவட்டங்களில் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 3 கோடிக்கும் அதிகமான பழங்குடியினர் பயனடைந்துள்ளனர்.

பல தசாப்தங்களாக பழங்குடியின மக்களின் முன்னேற்றம் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. நாங்கள் அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.

காங்கிரசை மக்கள் புறக்கணிக்கிறார்கள்

நாட்டு மக்கள் காங்கிரசை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். அக்கட்சியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வரும் மக்கள் அக்கட்சியினரை தண்டித்து வருகிறார்கள்.

சிறு விவசாயிகள் தான் இந்திய வேளாண் துறையின் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். அவர்களின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். காங்கிரஸின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொள்கைகள் வாக்குவங்கியை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்படுகிறது.

பிற நாடுகளின் தடுப்பூசிகளை இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. நமது விஞ்ஞானிகளை இழிவுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் நமது விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை உருவாக்கி 150 நாடுகளுக்கு அதன் பலனை வழங்கியுள்ளனர்.

தற்போது பாதுகாப்புத் துறையில் 350 தனியார் நிறுவனங்கள் பங்களிப்பை வழங்குகின்றன. பாதுகாப்புத்துறையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு அறவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. சில்லறை விற்பனையில் இருந்து சுற்றுலாத்துறை வரை ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பாடுபடுகிறது….

முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நமது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் திறமையால் உலக மருந்து துறை மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.