மன்னார்குடி அருகே நான்கு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள், பயிர் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
டெல்டா மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டது. நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சார்பில் இரண்டு குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தந்து நேற்றும் இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதல் நாளான நேற்று நாகை மாவட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். இரண்டாவது நாளாக இன்று தஞ்சாவூர் பகுதியில் ஆய்வு செய்த மூன்று பேர் அடங்கிய மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் ரிஷியூர், அரிச்சபுரம், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து நெல் மணிகளை சேகரித்து சென்றனர்.
ஈரப்பதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்த மத்திய குழுவினர் பின்னர் துண்டகட்டளை, முதல்சேத்தி கிராமத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.







