உலகளவில் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் அதிகமான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தை நெருங்கிவருகிறது. இந்நிலையில் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா வைரஸ்களும் இந்தியர்களைப் பாதிப்புக்குள்ளாக்கிவருகிறது. இரண்டாம் அலை ஓரளவு முடிந்துள்ள நிலையில் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதங்களில் மூன்றாம் அலை தாக்கலாம் என மருத்துவ வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், கொரோனா தடுப்பூசி மையங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியையும் சரியாகப் பின்பற்றுகின்றனரா என லோக்கல் சர்க்கிள்ஸ் (Localcircles) என்னும் சமூக வலைத்தளம் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 312 மாவட்டங்களில் 33,000 பேரிடம் கேள்வி பதில் முறையில் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில் சுமார் 67% மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும் சுமார் 44% மக்கள் உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கக்கூடிய வகையிலான முகக்கவசங்களை அணியவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான மக்கள் துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசங்களையே அணிவதாகவும், இந்த முகக்கவசங்களால் டெல்டா பிளஸ் போன்ற உருமாறிய வைரஸ்களிடமிருந்து தப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் முகக்கவசங்களை சரியாக அணியாமல், கடமைக்காக மட்டுமே அணிவதால், அதன் மூலமும் கொரோனா அதிகளவில் பரவியுள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் கூறும்போது, பெரும்பாலும் கொரோனா தடுப்பூசி மையங்களே கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக (Hotspot) இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா மூன்றாவது அலையிலிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் மாவட்ட அளவிலும், கிராமங்கள் அளவிலும் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.







