தேர்தல் அறிவிப்புக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டினார்.
மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற எண்ணத்தில் முந்தைய அரசு அலட்சியம் காட்டியதால்தான் கொரோனா பரவல் அதிகரித்தாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்டார். மத்திய அரசிடம் இருந்து பதில் வராத நிலையிலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாகவும் அவர் கூறினார். கொரோனா தடுப்பு பணியில் அலட்சியம் காட்டவில்லை என்றும் அவர் திட்டவட்டாக தெரிவித்தார்.







