ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததாக பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
’ஒருநாள் கூத்து’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் நடித்துள்ள ’பொன் மாணிக்கவேல்’ இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
தமிழை அடுத்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனுடன் அவர் நடித்த ’அலா வைகுந்தபுரம் லோ’ ஹிட்டானதை அடுத்து, அங்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது அங்கு மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இவர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ’ஸ்விக்கி மற்றும் உணவகங்கள் என்ன மாதிரியான தரத்தை பினபற்றுகின்றன என்பது தெரியவில்லை. நான் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை, கரப்பான் பூச்சி இருந்தது. இதுபோன்ற உணவகங்களை சோதனை செய்து தரமாக இல்லை என்றால் அபராதம் விதிக்க வேண்டும். ரசிகர்கள் இது தொடர்பாக புகாரளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆதாரமாக கரப்பான் பூச்சி இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.







