அந்தியூர் அருகே பழமைவாய்ந்த செம்முனீஸ்வர் கோயில் திருவிழாவில் ஆடுகளை பலியாக கொடுத்து, பூசாரிகள் ஆட்டு ரத்தம் குடிக்கும், குட்டிக்குடி நுாதன வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வெள்ளிதிருப்பூரில் பகுதியிலுள்ள பூனாட்சி பூசாரியூரில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த செம்முனீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்த மாதம் 2-ம் தேதி திருவிழா தொடங்கியது. இதில் பூசாரியூரிலிருந்து செம்முனி சாமி, பச்சையம்மன், ரங்கநாதன் ஆகியோர் மகாமேரு தேரில் அங்கரிக்கப்பட்டு மடப்பள்ளியிலிருந்து கோயிலுக்கு சென்று திருவிழா ஆரம்பமானது.
விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடி திருவிழா நடைபெற்றது. இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், கர்நாடகா என பல மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் வந்த பக்தர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனால் தங்களுக்கு எவ்வித நோய் நொடியும் ஏற்படாமல் குடும்பம் வளர்ச்சி அடையும் என்பது ஐதிகம். பின்னர் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தங்களை பூசாரிகள் குடித்தப்படி மேளதாளத்திற்கு ஏற்றவாறு ஆட்டம் போட்டனர்.
மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தங்களை தொட்டு புடவைகளில் பொட்டாக வைத்துச்சென்றனர். அடுத்த மாதம் 13,14,15-ம் தேதி மீண்டும் வனபூஜை நடைபெற உள்ளது. இத்துடன் திருவிழா நிறைவடைகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
——அனகா காளமேகன்







