இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலையை மாற்றிய ஆர்.கே.நகரை போல ஈரோடு கிழக்கு தொகுதியும் அமையும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து சென்னையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதற்கான எங்களது நிலைப்பாட்டை வரும் 27ம் தேதி அறிவிப்போம் என்று கூறினார்.
இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலையை மாற்றிய ஆர்.கே.நகரை போல ஈரோடு கிழக்கு தொகுதியும் அமையும். இந்த இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதன் மூலம் மக்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அமமுக செயல்படும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே இலக்கு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இடைத்தேர்லில் தனித்தோ, கூட்டணி வைத்தோ அமமுக களம் இறங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.