ஈரோடு இடைத்தேர்தல் ; தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக  பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக  பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வரும் 31ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்க உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உட்கட்சி தேர்தல், இடைத் தேர்தல், செயற்குழு, பொதுக்குழு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சித்  தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தேமுதிக சார்பில் ஈரோடு மாவட்ட செயளாலரான ஆனந்த்  போட்டியிடுதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2011ம் ஆண்டு  ஈரோடு கிழக்கு தொகுதி முதன்முதலில் உருவாக்கப்பட்டபின் அங்கு முதல்முறையாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகதான் வென்றது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார்,  திமுக வேட்பாளர் எஸ்.முத்துசாமியைவிட 10,644 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக 6,776 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்து  தோல்வியை தழுவியது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருந்த நிலையில்  தேமுதிக ஆதரவுடன் போட்டியிட்ட அமமுக  1,204 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.