அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி அடுத்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவு, மார்ச் 02-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிமுக இதில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடும்படி ஈரோடு கிழக்குத் தொகுதியை தமாகாவிற்கு அதிமுக ஒதுக்கீடு செய்தது. தற்போது வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான பாஜகவிற்கு அதிமுக வாய்ப்பு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் விமர்சகர்கள் இடையே எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில், உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








