நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில், 149 பந்துகளில் 19 பவுண்ட்ரி மற்றும் 9 சிக்சர்கள் அடித்து 208 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த இரட்டை சதத்தின்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், 19 இன்னிங்ஸில் 1000 ரன்களை பதிவு செய்ததன் மூலம், இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து, வேகமாக 1000 ரன்களை எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் நிதானமாக ஆடினார். ஆனால் கான்வே, நிகோலஸ், மிட்செல் என பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்து அணி ரன்கள் குவிக்க முடியாமல் திணறியது. ஃபின் ஆலனும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய பிராஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்ட்னர் இணை, அதிரடியாக ஆடத் தொடங்கினர். சாண்ட்னர் 57 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தாலும், பிராஸ்வெல் சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி 77 பந்துகளில், 140 ரன்கள் குவித்தார். ஆனால், இறுதிவரை கடுமையாக போராடிய நியூசிலாந்து அணி, 49.2 ஓவர்களில் 337 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.