ஈரோடு கிழக்கு தொகுதிகான இடைத்தேர்தல் பிரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படடு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஈரோடு கிழக்கு தொகுதிகான இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி, எந்த தேதியில் தொகுதி காலி என்று அறிவிக்கப்படுகிறதோ அதே நாளில் இருந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுவாக இடைத்தேர்தல் செலவை கட்டுப்படுத்தும் விதமாக பெரிய தேர்தலுடன் சேர்த்து தான் தேர்தல் நடத்தப்படும். அல்லது வேறு வழியே இல்லாத பட்சத்தில் இடைத்தேர்தல்கள் தனியாக நடத்தப்படும். ஆனால் அடுத்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை என்பதனால் இன்று ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் 27-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவு, மார்ச் 02-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.