ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. இறுத்திக்கட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தற்போது பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
அண்மைச் செய்தி:தீவன மூலப்பொருட்கள் மீதான 5% ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் – கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை!
இதன்படி, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் பார்வைக்கு வைக்கக் கூடாது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிட்டது.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கியுள்ள வெளியூரை சேர்ந்த நபர்களை வெளியேற்றும் பணியும் தொடங்கியுள்ளது.








