ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இபிஎஸ் ஆதரவாளரான கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களை தொடர்ந்து தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உள்பட 77 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இதற்காக நியமிக்கப்பட்ட 238 அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்குச் சென்று பூத் ஸ்லிப் வழங்கி வருகின்றனர். இதில் வாக்காளர்கள் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர் இடம்பெற்றுள்ள பாகத்தின் எண் மற்றும் பெயர், வாக்குச்சாவடியின் பெயர், தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
இந்த பூத் ஸ்லிப்பை மட்டுமே வைத்து வாக்களிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட உறுப்பினர்களிடம், வாக்காளர்களிடம் அளித்து அதற்குரிய ஒப்புதலை பெற்றனர்.
மேலும் 24-ந்தேதி வரை வழங்கப்படவுள்ள இந்த பூத் சிலிப்பை இன்று காலை 8 மணி முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்து தேர்தல் அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் பெற முடியாத அல்லது கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறும் நாளன்று அந்தந்த வாக்கு சாவடிகளிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா










