தனது மகனுக்கு சரியாக முடி வெட்டவில்லை என்று கூறி முடி வெட்டும் கடைக்கு
பூட்டு போட்ட காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி திருநெல்வேலி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் பணிபுரியும் நேவிஸ் பிரிட்டோ. இவரது மகன் இன்று முடி வெட்டுவதற்காக சலூன் கடைக்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது. தனது மகனுக்கு முடியை சரியாக வெட்டவில்லை என்று கூறி திசையன்விளை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நேவிஸ் பிரிட்டோ மற்றும்
அவரது மனைவி இருவரும் சேர்ந்து சலூன் கடைக்கு சென்றுள்ளனர்.
கடை உரிமையாளர் கடையில் இல்லாத நேரத்தில் சலூன் கடைக்கு நேரடியாக சென்று கடை உரிமையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கெட்ட வார்த்தைகளால் பேசியும் அவதூறாக திட்டியும் உள்ளார். இதனால் அருகில் உள்ள அனைவரும் என்ன சம்பவம் என்று அருகில் சென்று பார்த்த போது கையில் பெரிய பூட்டுடன் கடையை பூட்ட முயற்சி செய்து உள்ளார்.
அருகில் உள்ள கடைக்காரர்கள் கடையை பூட்டாதீர்கள், சரியாக விசாரணை செய்யுங்கள்
உரிமையாளர் சாப்பிட சென்றுள்ளார் இப்பொழுது வந்து விடுவார் என்று தடுத்த போதும்
கேட்காமல் அவர்களையும் அவமரியாதையாக பேசிவிட்டு கடையை ஷட்டரை பூட்டினார்.
சிறிது நேரம் கழித்து கடையின் உரிமையாளர் யுவ சிவராமன் வந்தவுடன் அங்கிருந்து
உடனடியாக காவலர் நேவிஸ் பிரிட்டோ கிளம்பிவிட்டார். இதன் பின்னர் அவரது மனைவி அங்கு நின்று கொண்டு அவரிடம் மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
அந்த சிறுவனிடம் நான் உனக்கு முடி வெட்டினேனா என்று கேட்டதற்கு இல்லை என்று அனைவரது முன்னிலையும் பதில் அளித்துள்ளான். இதற்கிடையே சம்பவம் குறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் நேவிஸ் பிரிட்டோ மீது சலூன் கடைக்காரர் புகார் செய்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் காவலர் நேவிஸ் பிரிட்டோவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் காவலர் அவதூறாக பேசிய ஆடியோவையும் அவர் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். இதுதொடர்பாக வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணையின் அடிப்படையில் காவலர் நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
– யாழன்







