ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று நேரில் சந்தித்தனர்.
ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பாரத இந்து பரிவார் அமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பேசிய பாரத இந்து பரிவார் அமைப்பின் தேசியத் தலைவர் ராஜன் அதிமுக ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் அவர்களின்உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளதாக கூறினார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பணியாற்ற தயாராக உள்ளதாகவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியபடி செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தார். இவர்களுடன் திருவண்ணாமலை கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் உடன் வருகை தந்தார்.
இவர்களைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து, மனித உரிமைகள் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்தனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய மனித உரிமைகள் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன், தமிழகத்தில் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், இதற்கு பாடம் புகட்டும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற செய்ய உழைப்போம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி மட்டும் தான் வெற்றி பெறும் என்ற நிலையை மாற்றி, அதிமுகவை வெற்றி பெற செய்து சட்டமன்றத்தில் கூடுதலாக ஒரு உறுப்பினரை கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம் எனவும் , அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களை வலுப்படுத்துவோம் என்றும் கூறினார்.