#Erode | “அவசரப்பட்டியே குமாரு”… மூதாட்டியிடம் செயின் பறித்த கும்பல் – கடைசியில் நடந்த டுவிஸ்ட்!

மூதாட்டியிடம் தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்துச்சென்ற இளைஞர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள முகாசி பிடாரியூர் ஈஸ்வரன் கோயில்பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். இவர் கடந்த…

மூதாட்டியிடம் தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்துச்சென்ற இளைஞர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள முகாசி பிடாரியூர் ஈஸ்வரன் கோயில்
பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.25) அன்று அருகாமையில் இருந்த கோயிலின் பின்புறம் மாடுகளை மேய்த்துகொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் வழி கேட்பது போல மூதாட்டி கண்ணம்மாளிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென கண்ணம்மாள் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்
கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக சென்னிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி கண்ணம்மாள் அணிந்திருந்தது கவரிங் நகை என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சென்னிமலை போலீசார் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

சென்னிமலை பேருந்து நிலைய பகுதியில் போலீசார் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் அவர்கள்தான் என்பது உறுதியானது. மேலும், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், மகாபிரபு மற்றும் சென்னிமலை பகுதியை சேர்ந்த தண்டபாணி (எ) அசோக் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.