ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி சாலையில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் ஏடிஎம்மில் இருந்த பணம் தப்பியது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி சாலையில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது.வங்கியின் முன்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கென ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்திற்கு இரவு நேரங்களில் காவலாளி இல்லை எனக்கூறப்படுகிறது. மேலும் இப்பகுதி எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் என்பதால் ஏடிஎம் மிஷனில் அடிக்கடி பணம் நிரப்பப்படுவது வழக்கம்.
ஏடிஎம் இயந்திரத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் யாரும் இல்லாததை அறிந்து ஏடிஎம் மிஷன் உள்ள அறையின் கதவை திறந்துள்ளார்.
உள்ளே இருந்த இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளார்.இயந்திரத்தை உடைப்பதற்குள் அங்கிருந்த அபாய எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்ப துவங்கியது.
இதனால் பதறிப்போன திருட்டு ஆசாமி கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலே திருட்டு முயற்சி நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேந்தன்







