கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுரைத்த அருள்மகன் வள்ளலார் நிறுவிய சன்மார்க்க சத்திய ஞான சபை கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளது.
அணையாத ஜோதியாய் பசித்தோரின் பசிப்பிணி போக்கிடும் அருள் ஆலயமாய் விளங்கும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 5ம் தேதி வள்ளலாரின் அவதார பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு வள்ளலார் அவதார திருநாள்,வள்ளலார் தர்மசாலை தொடங்கி 156 ஆண்டுகள் நிறைவு நாள், வள்ளலார் ஜோதி தரிசனம் நிகழ்த்திய 152வது ஆண்டு என முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு காலை 6 மணியளவில் 12 வயதுடைய சிறுமியின் கரங்களால் அருட்பெருட்ஜோதி ஏற்றப்பட்டது.
பின்னர் அகவல் பாராயணமும், அதன்பின் தர்மசாலை வளாகத்தில் சன்மார்க்க கொடியும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அருள்நெறி பரப்புரை பேரணி நடைபெற்றது.இதில் ஏராளமான பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வள்ளலாரின் கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதனை இளைய தலைமுறையினர் ஆர்வமுடன் கேட்டறிந்தனர். தொடர்ந்து காலை முதல் இரவு வரையில் அறுசுவை அன்னதானமும்,பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.








