பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் ஏற்பட்ட அதிருப்தியில், இரண்டு அணிகளாகிய சிவ சேனாவின் கட்சி, சின்னம் ஒரு தரப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் அதிமுக விவகாரம் என்னவாகும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்…
கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க எந்தக் தனிப்பெரும் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக -சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் பதவி எந்தக் கட்சிக்கு என்கிற முரண்பாடு ஏற்பட்டதால், திடீர் திருப்பமாக சிவசேனா, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கட்சி இணைந்து மகா விகாஸ் அகாடி என்று புதிய கூட்டணி, மொத்தம் 169 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சரனார்.
இரண்டரை ஆண்டுகள் ஆட்சித் தேர் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், சிவ சேனாவின் மூத்த தலைவரும் அப்போது அமைச்சராகவும் இருந்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போன் என்று முட்டுக்கட்டை போட்டார். தனது தலைமையில் 40 எம்.எல்.ஏக்களை திரட்டி அதிருப்தி அணியையும் உருவாக்கினார். காட்சிகள் அடுத்தடுத்து மாறின. கட்சி இரண்டானது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். 105 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள பாஜகவின் முத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சரானார்.
இதையடுத்து பெரும்பான்மை தனக்குத் தான் உள்ளது என்று ஏக்நாத் ஷிண்டேவும், அவரைத் தொடர்ந்து உத்தவ் தாக்ரேவும் தேர்தல் ஆணையத்தை அணுகினர். அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் கட்சியின் சின்னம் இருவருக்கும் வழங்கப்படாமல் முடக்கப்பட்டது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவிற்கு கட்சியும் வில், அம்பு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் தற்போது கொடுத்துள்ளது. மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏக்களில் 40 பேர் ஆதரவும் மொத்தமுள்ள 22 எம்.பிக்களில் 13 பேரின் ஆதரவும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு உள்ளதால், பெரும்பான்மை அடிப்படையில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கட்சிக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் மூவரும், மக்களவை உறுப்பினர்கள் 6 பேர் என மொத்தம் 9 எம்.பிக்கள், மாநில சட்டமேலவையின்
உறுப்பினர்கள் 12 பேரும் மற்றும் எம்.எல்.ஏக்கள் 15 பேரின் ஆதரவு இருந்தும் கட்சியின் சட்டவிதிகள், கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேணடும் என்கிற உத்தவ் தாக்ரேவின் வாதம் ஏற்கப்படவில்லை. உட்கட்சி பிரச்சனைக்கு பெரும்பான்மை அடிப்படையில் தீர்வு காண்பதே சரியாக இருக்கும்.
இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளில் பிளவு ஏற்பட்டபோது தீர்வு காணப்பட்டதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இது
மட்டுமின்றி, பெரும்பான்மை அடிப்படையில் உட்கட்சி பிரச்சனைகளில் தீர்வு காண்பதில் உள்ள முக்கியத்துவத்தை சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதையும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் சொல்லியுள்ளது.
இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் கொண்டாடி வருகின்றனர், ஆனால், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உத்தவ் தாக்ரே தரப்பினர், இது ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையம் பாஜகவின் ஏஜெண்டு போல் செயல்பட்டுள்ளது என்று கூறி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளர். இப்ப தமிழ்நாட்டுக்கு வருவோம்… இதே போன்று ஒரு நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம்
அதிமுக விவகாரத்திலும் எடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அக்கட்சியினரால் அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரை நீக்கி விட்டு, அந்த பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஒற்றைத் தலைமை முழக்கத்தால் அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் என்று ஒரு தரப்பும் 2026 வரை ஒபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர் என்கிறது மற்றொரு தரப்பு, இது குறித்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை முடிந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை நோக்கி உள்ளது.
அதிமுக பெயரும், சின்னமும் யாருக்கு ? பெரும்பான்மையின்படி முடிவு செய்தால் இபிஎஸ்க்கு சாதகமாகவும் ஓபிஎஸ்க்கு பாதகமாகவும் அமையலாம். இதனால், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிவ சேனா விவகாரத்தைச் சொல்லி, கட்சி, சின்னத்தைப் பெற்று விடலாம் என்று மகிழ்ச்சியில் இருக்கிறது இபிஎஸ் தரப்பு என்கிறார்கள். யாருக்கு அதிர்ச்சி, யாருக்கு மகிழ்ச்சி என்பதை தீர்மானிக்கப் போவது உச்சநீதிமன்றமா? தேர்தல் ஆணையமா? விரைவில் விடை தெரியும்.
இது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண….











