நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி? 40 தொகுதிகளில் வெற்றி பெற பணியாற்றுங்கள் என கட்சியினருக்கு இபிஎஸ் கடிதம்!

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்தி தான், தமிழ் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் என்பதை மனதில் நிலைநிறுத்தி பணியாற்றிட வேண்டும் என எடப்பாடி…

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்தி தான், தமிழ் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் என்பதை மனதில் நிலைநிறுத்தி பணியாற்றிட வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அதிமுக தனித்து போட்டியிட உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாம் அனைவரும் உயிரினும் மேலாக மதித்துப் போற்றிவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, உங்கள் அனைவரையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நிலவிய காலத்தில் ஒரு புரட்சிகரமான அரசியல் மாற்றத்தை தமிழ் நாடு, பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நிகழ்த்திக் காட்டியது. மாநில உரிமைகளை பேணிக் காக்கின்ற, சமூக நீதி போற்றுகின்ற ஒரு நல்லரசை பேரறிஞர் அண்ணா நிறுவினார். அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு தீய சக்தி, அண்ணாவின் இயக்கத்தைக் கைப்பற்றி,  டாக்டர் எம்.ஜி.ஆரை கட்சியைவிட்டு வெளியேற்றி, திமுக-வை கபளீகரம் செய்து தமிழ் நாட்டை நாசம் செய்தது.

இந்த வேளையில், தமிழ் நாட்டைக் காக்கும் புனிதப் போரில், எம்.ஜி.ஆர். மக்களின் எழுச்சிமிகு பேராதரவோடு 17.10.1972 அன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தை தோற்றுவித்தார். 1977-ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஏழை, எளியோர் உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எம்.ஜி.ஆர் தலைமையில் தமிழ் நாட்டில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, கழகத்தைக் கட்டிக் காத்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டம்; 69% இடஒதுக்கீட்டிற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு; அம்மா உணவகம்; மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணினி என்று எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து, தமிழ் நாட்டை “அமைதி, வளம், வளர்ச்சி” என்கிற கோட்பாட்டின்படி பீடுநடை போடச் செய்தார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எதிரிகளும், துரோகிகளும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நின்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்திடத் துடித்த நேரத்தில், நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும், என் உயிருக்கு நிகரான கழகத் தொண்டர்களின் பேராதரவோடும், அனைத்து சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி அதிமுகவை மீட்டு, வீறுநடை போடச் செய்திருக்கிறோம். எம்.ஜி.ஆர்-ஆல் உருவாக்கப்பட்ட அதிமுக, ஜெயலலிதா-ஆல் “இன்னும் நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் பணியாற்றும்” என்று பேரறிவிப்பு செய்யப்பட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 29 மாத கால திமுக ஆட்சி, தமிழ் நாட்டின் உரிமைகளை காவு கொடுத்து மக்களின் வாழ்வை துயர் மிகுந்ததாக மாற்றிவிட்டது. மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு என்று மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எங்கெங்கு காணினும் கள்ளச் சாராயமும், கஞ்சா புழக்கமும் தமிழ் நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ வேண்டிய சட்டமன்றமே, ஜனநாயகத்தின் புதைகுழியாக மாற்றப்படுகிறது. ஒரு குடும்பம் தமிழ் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது.
இந்தியத் திருநாடு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், மக்களை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்க இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்தி தான், தமிழ் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக அமையும் என்பதை நாம் அனைவரும் மனதில் நிலைநிறுத்தி அயராது பணியாற்றிட வேண்டும்.

52-ஆவது ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், காவிரி உரிமையை காவு கொடுத்து, விவசாயிகளை அழிக்கத் துடிக்கின்ற; மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ள; சட்டம்-ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, இந்த ஆளுமைத் திறனற்ற ஆட்சியாளர்களின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரை எழுதிட நாம் அனைவரும் சூளுரை ஏற்போம்; வெற்றி காண்போம்.

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்… நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் நாளைய தமிழ் நாடு வளமாகும்!!

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.