உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் அதிமுகவை
மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என உளப்பூர்வமாக உறுதி ஏற்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அதிமுக துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு செய்து 51வது ஆண்டு துவக்க விழா
கொண்டாட்டங்கள் வருகின்ற 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 51 வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார் . 51வது தொடக்க விழா முன்னிட்டு மாவட்ட செயலாளர் முதல் கிளைக் கழக செயலாளர் வரை அனைத்து தொண்டர்களுக்கும் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொள்வதாக மடலில் தெரிவித்துள்ளார். 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுகவால் பதவி சுகங்களை அனுபவித்தவர்கள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது என செய்த துரோகத்தால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் ஆட்சியை
இழந்ததாக அவர் கூறியுள்ளார். தேர்தலில் தோற்றமே தவிர கொண்ட கொள்கையிலும் கோட்பாடுகளிலும், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் அவர்களின் எண்ணங்களை ஈடேற்ற வேண்டும் என்ற பயணத்தில் தோற்கவில்லை என மடலில் தெரிவித்துள்ளார். 
தங்களுடைய எண்ணம் ஈடறவில்லை, தங்களுக்கும் தங்கள் வாரிசுக்கும் பதவி கிடைக்கவில்லை என இடம் மாறிய தலைவர்கள் உண்டே தவிர , ஒரு தொண்டர் கூட அதிமுகவை விட்டு விலகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என உளப்பூர்வமாக உறுதி ஏற்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.







