அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காமராஜுக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மன்னார்குடி, கோவை, திருச்சி, தஞ்சை, சென்னை, திருவாரூர் ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை சவுரிபாளையம் பிரிவு அருகே முன்னாள் அமைச்சர் காமராஜின் இரண்டாவது மகன் டாக்டர் இன்பன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
ராயல் ஸ்கைலைன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் இன்பனுக்கு குடியிருப்பு உள்ளது.
ஸ்ரீ வாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக டாக்டர் இன்பன் இருந்து வருகிறார். இன்று காலை 7 மணி முதல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டாக்டர் இன்பனின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருச்சி, திருவாரூர், சென்னை உள்பட 5 மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத திமுக அரசு, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.
அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அதிமுக தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டின் முன் அதிமுகவினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.







