அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும் போட்டியிடலாம்- இபிஎஸ் தரப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில்  ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு இடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதம் அனல் பறந்தது ஜூலை…

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில்  ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு இடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதம் அனல் பறந்தது

ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்  அம்மன் பி வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாணை  சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்,  ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் மற்ற விவகாரங்கள் தொடர்பான கோரிக்கைகளை எழுப்பலாம் என தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை தவிர்த்து பிற விவகாரங்களை விவாதத்துக்கு எடுக்க கூடாது என்பது தான் முதல் சுற்று வழக்கு என்று கூறிய ஓபிஎஸ் தரப்பு. தற்போது பொதுக்குழு கூட்டப்பட்டதே செல்லாது என வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பொதுக் குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ள நிலையில் தாம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசே செல்லுமா என்பது தான் இந்த வழக்கு என்றும், அதிமுக சட்டவிதிகளின்படி பொதுக்குழு நடத்தபடவில்லை என்பது தான் எங்களின் வாதம் என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

பொதுக்குழுவுக்கு தலைமைக்கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், அப்படி ஒரு பதவியே தற்போது அதிமுகவில் இல்லை என வாதிட்டார்.  அதிமுக கட்சி விதிகளில் பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரமே உள்ளது என வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு,  15 நாள்களுக்கு முன்னர் பொது குழு தொடர்பான அறிவிப்பு கிடைக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாததால் அவர்களால் செயல்பட முடியவில்லை என கூறி, இரு பதவிகளும் காலியாக இருந்தால் பொதுக்குழு கூட்டலாம் என்ற விதியை பயன்படுத்த எதிர் தரப்பினர் முயற்சிப்பதாகவும் வாதிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுக செயல்படும் தன்மையையே மாற்றி அமைக்க முயல்வதாகவும் ஓபிஎஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது,

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி வாதாடினார். ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டம் சட்டப்படி நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், மற்ற விவகாரங்களை உயர் நீதிமன்றத்தில் எழுப்பலாம் எனத் தெரிவித்துள்ளதாகவு அவர் கூறினார்.  ஜூலை 11 பொதுக்குழு குறித்து ஜூன் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டது அனைத்து பத்திரிகைகளிலும் வந்துள்ளது என்றும், 13 நாட்களுக்கு பின் பொதுக்குழுவுக்கு தடைகோரி  வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்  இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது, இதன்மூலம் குறித்த காலத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று கருத வேண்டும், கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்க கூடாது எனவும் இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடத்த அனுமதித்துள்ள நிலையில் வேண்டுமென்றே அதை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.ஜூலை 11ந்தேதி பொதுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு  அதன் பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் நீதிமன்றத்தில் கூறியது, தலைமை கழக நிர்வாகிகள் என்கிற பதவியே இல்லை என்கிற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதத்தை மறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தலைமை கழக நிர்வாகிகள் பெயரில்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக வாதாடினார். இந்த வழக்கில் வாதி மற்றும் பிர வாதியாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கின்றார் எனவே அவரது மனுவை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அதிமுக, இ பி எஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கு விசாரணையை நாளை மதியத்திற்கு  ஒத்திவைத்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.