சென்னையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக நேற்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இருக்கை விவகாரத்தில் தம்முடைய முடிவே இறுதியானது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதை எதிர்த்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைக்கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழுப்புரத்தில் காந்தி சிலை முன்பு அதிமுக நகர செயலாளர் பசுபதி தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக காவல்துறை மற்றும் முதலமைச்சரை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது நடவடிக்கையை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்லில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். அப்போது ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட அதிமுகவினர் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், சபாநாயகர் அப்பாவு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் , தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
திருவாரூர், திருநெல்வேலி, தேனி, மதுரை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அதிமுகவினர், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.