எண்ணூர் பர்மா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை எண்ணூர் பர்மா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் – அங்காள ஈஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 5ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில், விழா நடைபெறும் 10 நாட்களில், அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பர்மா நகரின் அனைத்து வீதிகளிலும் உலா வந்தார்.
பின்னா், முக்கிய நிகழ்ச்சியான, தீ மிதி திருவிழாவையொட்டி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள், பாரதியார் நகர் கடற்கரையில் நீராடி, அழகுவேல், கூண்டு வேல், மணிவேல் அணிந்தும், தீச்சட்டி, முளைப்பாரி ஏந்தியும் கோயிலை நோக்கி படையெடுத்தனர். நிறைவாக, கோயில் வளாகத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த, அக்னி குண்டத்தில் தங்களது குழந்தைகளை கையில் ஏந்தியவாறு குண்டத்தில் பக்தி பரவசத்துடன் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுற்றுவட்டாரத்தை சோ்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடும் திருவிழா என்பதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரதியார் நகர் முதல் பர்மா நகர் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மேலும் வாணவேடிக்கைகள், வண்ண வண்ண அலங்கார மின் விளக்குகள், தோரணங்கள் என விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில், அனைத்து கட்சியினரும் அனைத்து மதத்தினரும் ஒன்று கூடி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
-ரூபி