அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் இழுபறி!!

காவேரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த…

காவேரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று முன்தினம் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனால் உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். அவருக்குக் காவேரி மருத்துவமனையில் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ வார்டு (sky view ward) என்ற தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் ஆகியவை வழங்கப்பட்டும், அவரிடம் விசாரணை நடத்துவதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட முதல் இரண்டு (13,14)நாட்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு நான்காவது(15,16,17,18 )நாளாக அவருடைய உடல் தொடர்ந்து காவிரி மருத்துவமனை மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கண்காணித்து வருகின்றனர். மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமலாக்க துறையின் விசாரணைக்கு ஏற்றவாறு அவருடைய உடல்நிலை கடந்த மூன்று நாட்களில் எப்படி இருக்கிறது என்று விவரங்களை அமலாக்க துறையினர் காவேரி மருத்துவமனை மருத்துவரிடம் இருந்து விவரங்களை சேகரித்துள்ளனர். மருத்துவர்கள் கொடுத்துள்ள விவரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்க துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.