இண்டிகோ விமானத்தில் எமர்ஜன்சி கதவை திறந்த விவகாரம்; டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவு

இண்டிகோ விமானத்தில் இரண்டு பயணிகள் எமர்ஜன்சி கதவை திறந்தது தொடர்பாக எழுந்த  புகாரில்  இந்திய விமானப் போக்குவரத்துறை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10ம் தேதி 6E 7339 எண் கொண்ட  …

இண்டிகோ விமானத்தில் இரண்டு பயணிகள் எமர்ஜன்சி கதவை திறந்தது தொடர்பாக எழுந்த  புகாரில்  இந்திய விமானப் போக்குவரத்துறை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 10ம் தேதி 6E 7339 எண் கொண்ட   இண்டிகோ  விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி வந்துள்ளது. இந்த விமானம் காலை சரியாக 10.05 மணிக்கு புறப்பட  வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட  இரண்டரை மணி நேரம் கால  தாமதமாக  சென்றுள்ளது.

இதற்கான காரணம் விமானம் புறப்பட தயாராகி லேசாக ஓடுதளத்தில் நகரத் தொடங்கிய போது  சிலர் விமானத்தின் எமர்ஜன்சி கதவுகளை திறந்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த விமானக் குழுவினர் விமானத்தை நிறுத்தி பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டனர். அதன் பின்னர் மீண்டும் விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விமானத்தினுள் ப்ரஷர்  உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்றன.

சோதனை முடிவடைய இரண்டரை மணி நேரம் ஆன நிலையில் அதன் பின்னரே விமானம் கால தாமதமாக புறப்பட்டது. எமர்ஜென்சி கதவை திறந்த பயணிகள் விமானத்தின் பணிக்குழுவிடம் தவறுதலாக நடந்ததாக மன்னிப்பு கேட்ட பின் அவர்களை வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டு விமானம் புறப்பட்டு சென்றது.

இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்திய விமான போக்குவரத்துறை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  எமர்ஜென்சி கதவுகளை திறந்த பயணிகள் யார் என்கிற விபரத்தை டிஜிசிஏ அறிவிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் “ இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை திறந்தது தென்னிந்தியாவை சார்ந்த இரண்டு அரசியல்வாதிகள் தான் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.