டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா – கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் தாக்கல்!

டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி…

டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக புதன்கிழமை மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலுல்கள் குறித்து விவாதம் நடத்த இயலாமல் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 8-வது நாளாக நேற்றும் முடங்கியது.

இதற்கிடையே மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 10 நாள்களில் பட்டியலிடப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்ட மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இன்று மக்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, என்.கே. பிரேமசந்திரன், சசி தரூர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவர்களின் எதிர்ப்புக்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி யூனியன் பிரதேசம் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. டெல்லி தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது. இந்த பின்னணியிலேயே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் மசோதாவை எதிர்க்கின்றன என தெரிவித்தார்.

அவசர சட்ட மசோதாவின் பின்னணி;

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால், குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய அரசே நியமிக்க வழிவகுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இச்சட்டத்திற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.

இதற்கிடையில், டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அதில் சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என மத்திய அரசு அவரச சட்டம் பிறப்பித்தது. இந்த வழக்கில், டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது என தீர்ப்பளித்தது.

இதையடுத்து, டெல்லி, அந்தமான்-நிகோபாா், லட்சத் தீவு, டாமன்-டையூ, தாத்ரா-நகா்ஹவேலி குடிமைப் பணிகள் (டேனிக்ஸ்) பிரிவைச் சோ்ந்த குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதன்மூலம் டெல்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடைமுறைகள் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், துணைநிலை ஆளுநா் வசமே மீண்டும் கொண்டுவரப்பட்டது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.