தரமற்ற மருந்துகள் தயாரித்தது குறித்து 6 இந்திய மருந்து கம்பெனிகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அந்த கேள்விகளாவது:
- நாடாளுமன்றத்தில் தரமற்ற மருந்துகள் தயாரித்ததாக 18 மருந்து கம்பெனிகள் உரிமம் ரத்து செய்யப்பட்டதா?
- அரசு 76 மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்து, அவற்றில் 26 நிறுவனங்களுக்குக் நோட்டீஸ் கொடுத்ததா? அப்படி கொடுக்கப்பட்டது என்றால் அதன் விவரங்கள் என்ன?
- உலக சுகாதார நிறுவனம் தரமற்ற மருந்துகள் தயாரித்ததாக சில மருந்து நிறுவனங்களை எச்சரித்திருப்பது உண்மையா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்விக்கு மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ பகவந்த் குபா தெரிவித்த பதில்களாவது:
நாட்டில் 137 மருந்து தயாரிப்பு கம்பெனிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தரமற்ற மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனிகளின் உரிமம் ரத்து, உற்பத்தி நிறுத்தி வைப்பு (தடை) போன்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஜூலை மாதம் வரை தரமற்ற மருந்துகள் தயாரித்தது குறித்து 6 இந்திய மருந்து கம்பெனிகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை மந்திரி ஸ்ரீ பகவந்த் குபா அவர்கள் தெரிவித்துள்ளார்.







