ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 75 இளம் விஞ்ஞானிகள் ரஷ்யா செல்ல தேர்வானது எப்படி? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள் ஒதுக்கீடு, புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு மட்டுமல்லாது பல்வேறு அறக்கட்டளைகளும் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக அகத்தியன் அறக்கட்டளை சார்பில் மூத்த விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளையின் முன்னெடுப்பால் 75 மாணவர்கள் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வாகியுள்ளனர். கொரனா பெருந்தொற்று காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக தமிழ் மொழியிலே ராக்கெட் சயின்ஸ் தொழில்நுட்பத்தை ஆன்லைன் மூலமாகவே கற்றுத்தர தொடங்கினார் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை. அவரின் தொடர் முயற்சியின் காரணமாக பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரஷ்யா செல்ல வேண்டும் என்ற கனவு நினைவாகியுள்ளது.
சிறுவயதில் இருந்தே அறிவியில் துறையில் இருந்த ஆர்வம் தான் ராக்கெட் சயின்ஸ் பயிற்சியில் சேர உதவியாக இருந்ததாக கூறும் அரசுப்பள்ளி மாணவர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவோம் என்று கூறுகின்றனர். விமானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு கூலித் தொழிலாளியின் மகள் விமானத்தில் வெளிநாடு செல்ல இந்த பயிற்சி ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி மாணவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.
கனவில் கூட நினைத்திராத எட்டாக் கனியாக இருந்த ஏவுகணை அறிவியல் படிப்பு அரசுப்பள்ளி மாணவர்களின் வசமாகியுள்ளது. ஏவுகணை அறிவியல் படிப்போடு நேர மேலாண்மை, சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் இந்த பயிற்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளே அவர்கள் எந்தளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்ததாக விஞ்ஞானி சிவதானுப்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்த கால மாணவர்கள் அறிவியல் உலகின் எதிர்காலமான விண்வெளியை பற்றி அறிந்து கொள்ள பாடப்புத்தகங்களில் அது தொடர்பான தகவல்கள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்
வறுமையில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்காக இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்திருப்பதாகவும், அரசு உதவி செய்யும் பட்சத்தில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி எடுக்க முயற்சி செய்வோம் என அகத்தியன் அறக்கட்டளையைச் சேர்ந்த விஞ்ஞானி கோகுல் உறுதியளித்திருக்கிறார்.
அரசுப் பள்ளி என்றால் ஏளனம் என்ற நிலைமாறி அப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் ரஷ்யா செல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். சொந்த மாவட்டத்தையே முழுதும் சுற்றிப் பார்த்திராத மாணவர்கள் விமானம் ஏறி வெளிநாட்டில் பயிற்சி பெற போகிறார்கள். அரசுப்பள்ளிகளில் இருந்து உருவாகியுள்ள 75 இளம் விஞ்ஞானிகள் தொடக்கம் என்றாலும் இனி வரும் காலங்களில் ஏராளமான விஞ்ஞானிகளை உருவாக்கும் இடமாக அரசுப்பள்ளிகள் மாறப்போகின்றன என்பது உறுதி.
இந்த செய்தியை காணொளியாக காண:







